31.7.08

தான்தோன்றிப் பாடலும் யுகங்களின் துயரமும்--ஸ்நேகிதன்

என் இசைப்பாடல்களை
நீர்த்துப் போன இக்காற்றில்
உலவச் செய்கிறேன்.
நேற்றின் பாடல்களைப் பிதற்றித் திரியும்
இல்லாத சூர்ப்பனகையொருத்தி
மூக்கிழந்ந துயரம் சொல்லி மடி சாய்கிறாள்.
அவளது துயரம்
யுகாதி யுகங்களுக்கானது
இல்லாமையின் இருப்பு
சொட்டி வழிந்து கொண்டிருக்கும்
அவளது தலையுதிரத்தில் வாசமடிக்கிறது.
இங்கு நிலா வெளிச்சத்தில்
இரதங்கள் ஓடியது.
தொண்டைக் குழிகள் கிழிபட்ட இரத்தம்
ஒலிப்பெருக்கி வழி தெருவோடியது.
அவளின் இல்லாத மூக்கின்
புராதன நிமித்தம்
மண் கடலில் பிரேதங்கள் மிதந்தன.
ஆமாம், இன்னும் இன்னும்
மண் கடலில் பிரேதங்கள் மிதக்கின்றன.
இரண்டு லார்ஜுகள்
ரொமொனாவ் வோட்காவில்
எலுமிச்சஞ்சாற்றைப் பிழிந்தடித்த போதையில்
கிடந்துறங்கிப் போன அவள்
பிறகொரு நாளிலெழுந்து
மாயவனம் சென்று சேர்ந்தாள்.
இன்னமும் மண் கடலில் பிரேதங்கள் மிதக்கின்றன.
மரணத்தின் பேரழுகையை
சொல்லியலைகின்றன செய்வதற்கியலா
என் பாடல்கள்.

No comments: